கைகேயி சூழ்வினைப் படலம் - 1652
கூட்டத்தின் பெருக்கம் பற்றிய பேச்சு
1652.
‘வேந்தரே பெரிது’ என்பாரும்,
‘வேதியர் பெரிது’ என்பாரும்,
‘மாந்தரே பெரிது’ என்பாரும்,
‘மகளிரே பெரிது’ என்பாரும்,
போந்ததே பெரிது’ என்பாரும்,
‘புகுவதே பெரிது’ என்பாரும்,
தேர்ந்ததே தேரிந் அல்லால், யாவரே
தெரியக் கண்டார்?
வேந்தரேபெரிது என்பாரும் - (அந்தக் கூட்டத்தில்) அரசர்களின்
தொகுதியேமிகுதி என்பவரும்; வேதியர் பெரிது என்பாரும்-
மறையவர் தொகுதியே மிகுதிஎன்பவரும்; மாந்தரேபெரிது என்பாரும்
- ஆடவர் தொகுதியே மிகுதி என்பவரும்; மகளிரேபெரிது
என்பாரும் - பெண்டிர் தொகுதியேமிகுதி என்பவரும்; போந்ததே
பெரிது என்பாரும் - வந்து சேர்ந்தவர் கூட்டமே மிகுதிஎன்பவரும்;
புகுவதே பெரிது என்பாரும் - வரப்போகும்கூட்டமே மிகுதியாக
இருக்கும் என்பவரும் ஆக; தேர்ந்ததே தேரின் அல்லால்- தாம்
அறிந்ததையே அறிந்ததன்றி; யாவரே தெரியக் கண்டார்- எவர்தாம்
முழுவதும் நன்றாய் அறிந்தவர்? (ஒருவருமில்லைஎன்றபடி).
இதனால் ஒவ்வொரு குழுவும் அளவிட முடியாதவாறு மிகுதியாய்
இருந்தது என்பது குறிக்கப்பட்டது. வேந்தர் முதலியவர் அவரவர்
தொகுதிக்கு ஆகிவந்தனர்; ஆகுபெயர். பெரிது என்னும் ஒன்றன்பால்
வினைமுடிபுக்கு ஏற்ப அவ்வாறு கொள்ளல் வேண்டும். மகளிரைப் பின்னர்க்
குறித்தமையின்மாந்தர் என்பது அவர்களை நீக்கி ஆடவரை மட்டும்
கூட்டியது. 73
