கைகேயி சூழ்வினைப் படலம் - 1636

bookmark

குமுதம் குவிந்தமை

1636.    

சாய் அடங்க, நலம் கலந்து தயங்கு
     தன் குல நன்மையும்
போய் அடங்க, நெடுங் கொடுங் பழிகொண்டு,
     அரும் புகழ் சிந்தும் அத்
தீ அடங்கிய சிந்தையாள் செயல்கண்டு,
     சீரிய நங்கையார்.
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த -
     வண் குமுதங்களே.


     சாய் அடங்க - தன் பெருமை அழியவும்;  நலம் கலந்து  தயங்கு
தன்குல நன்மையும்- நன்மை பொருந்தி விளங்குகின்ற  தனது  குலத்தின்
சிறப்பும்;  போய் அடங்க -  கெட்டழியவும்; நெடுங் கொடும் பழி
கொண்டு - நெடுங்காலம் நிற்பதாகிய கொடிய பழியையேற்றும்; அரும்
புகழ் சிந்தும் - பெறுதற்கரிய புகழைச் சிதறுகின்ற;  அத் தீ அடங்கிய
சிந்தையாள்-அந்தக் கொடுமை பொருந்திய மனத்தையுடைய
கைகேயியினது;  செயல் கண்டு - தகாத செயலைப்பார்த்து;  சீரிய
நங்கைமார் வாய் - சிறந்த பெண்களின் வாய்கள்;  அடங்கின என்ன-
அடங்கி மூடினாற்போல; வண்  குமுதங்கள் - வளப்பத்தையுடைய
செவ்வாம் பல் மலர்கள்;வந்து  குவிந்த - (இதழ்கள் கூடி) மூடின.

     ஆம்பல் மலர் காலையில் குவிதல் இயற்கை நிகழ்ச்சி. அது
கைகேயியின் கொடுமை கண்டு குலப்பெண்டிர்வாயடங்கியிருந்தாற்போன்று
இருந்தது என்பது தற்குறிப் பேற்றம். பழி கொண்டு புகழ் சிந்தினாள்என்பது
மாற்றுநிலை அணி (பரிவர்த்தனாலங்காரம்). தீ - உலமவாகு பெயர்;
தீப்போலும் கொடுமையைக்குறித்தது.                             57