கைகேயி சூழ்வினைப் படலம் - 1624
1624.
என்று, என்று, உன்னும்;
பன்னி இரக்கும்; இடர் தோயும்;
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல்
உழக்கும்; ‘உயிர் உண்டோ?
இன்று! இன்று! ’ என்னும்
வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் -
குன்று ஒன்று ஒன்றோடு
ஒன்றியது என்னக் குவி தோளான்.
பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது
என்ன - மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு; குவி
தோளான் - திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று
உன்னும் - முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்; பன்னி இரங்கும் -
வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில்
அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத;
இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர்
உண்டோ - மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் -
இல்லை இல்லை என்று கூறும்படி; மயங்கும் - மூர்ச்சையுறுவான்;
இடையும்- (நெஞ்சம்) உடைவான்.
தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப்
பட்டது. ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ - இல்பொருள்
உவமை. 45
