கைகேயி சூழ்வினைப் படலம் - 1618
தயரதன் துன்பச்சொல் (1618-1624)
மண்ணில் விழுந்து, மன்னன் புலம்புதல்
1618.
கொடியாள் இன்ன கூறினள்; கூற,
குல வேந்தன்,
‘முடி சூடாமல் வெம்பரல்
மொய் கானிடை, மெய்யே
நெடியான் நீங்க, நீங்கும் என்
ஆவி இனி’ என்னா,
இடி ஏறுண்ட மால் வரைபோல்,
மண்ணிடை வீழ்ந்தான்.
கொடியாள் - கொடியவளான கைகேயி; இன்னகூறினள் -
இப்படிப்பட்டவற்றைச்சொன்னாள்; கூற- சொல்ல; குல வேந்தன் -
சிறந்த மன்னர் மன்னனாகிய தயரதன்; இனி -இனிமேல்; நெடியான் -
இராமன்;முடிசூடாமல் - மகுடம்சூட்டிக்கொள்ளாமல்; வெம்பரல் மொய்
கானிடை நீங்க - கொடிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டில்
உறையச்செல்ல; மெய்யே என் ஆவி நீங்கும் என்ன-உண்மையாக
என் உயிர் பிரியும் என்றும் சொல்லி; இடி ஏறுண்ட மால்வரைபோல -
இடியினை ஏற்ற பெரிய மலையைப்போல; மண்ணிடை- பூமியில்;
வீழ்ந்தான் -சாய்ந்தான்.
திருமாலாதலின் இராமன் நெடியோன் என்று குறிக்கப்பெற்றான்.
ஏறுண்ட - தாக்கப்பட்ட; ‘இடிஏறு உண்ட’ எனப் பிரித்தும் ‘பேரிடி வீழ்ந்த’
எனப் பொருள் உரைப்பாரும் உண்டு. ‘காத்தலும்’என்ற பாடத்தினும்
‘வெம்பரல்’ என்று பாடமே சரி. 39
