கைகேயி சூழ்வினைப் படலம் - 1591

bookmark

இரண்டு வரங்களையும் ஈக எனல்

கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்  

1591.    

ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள்.

     ஆன்றவன்- குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரைகூற -
அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள்- தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன- அரசனே;
தோன்றிய பேர் அவலம்  துடைத்தல் உண்டேல் -எனக்கு
உண்டாகிய பெரியதுன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக - தேவர்கூட்டம் சாட்சியாக;  நீஅன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி- நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.

     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

     சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12