கைகேயி சூழ்வினைப் படலம் - 1589

bookmark

கைகேயி வரம் கேட்டல்

1589.    

வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,
கொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,
‘உண்டு கொலாம் அருள் என்கண்? உன்கண் ஒக்கின்,
பண்டைய இன்று பரிந்து அளித்தி’ என்றாள்.

     வண்டு உளர்த தாரவன் - வண்டுகள் ஒலிக்கும் மாலையை அணிந்த
அரசனது; வாய்மை கேட்ட மங்கை - சொற்களைச் செவியுற்ற கைகேயி;
நெடுங் கணின் கொண்ட ஆலி- நீண்ட கண்களில் கொண்ட
நீர்த்துளிகள்; கொங்கை கோப்ப - மார்பில் வீழ(அமுது கொண்டு);
‘என்கண் அருள் உன்கண் ஒக்கின் - உன்னிடத்தில் உள்ள தானால்;
பண்டைய - முன்னே எனக்குக் கொடுத்தவற்றை;  பரிந்து அளித்தி -
அன்புகொண்டுஅளிப்பாய்;’ என்றாள் - என்ற சொன்னாள்.

     இப் பாட்டில்கைகேயி நயமாகப் பேசித் தயரதனது சூளுரையைப்
பெறவகை செய்கிறாள். ‘நெடுங்கணின் கொண்ட ஆலி’ என மாற்றில்
கூட்டுக. பண்டையஎன்றது - சம்பரனோடு போர் நிகழ்ந்தபோது கைகேயி
உதவியதற்குத் தயரதன் மகிழ்ந்து கொடுத்த வரம் இரண்டையும்  குறித்தது.
பண்டைய - பலவின்பால் பெயர். தன் தருத்தை அறிந்தபின்னர் அரசன்
அதற்கு உடன்படுதல் அரிதாகலின் ‘பரிந்து அளித்தி’ என்றாள்.        10