கைகேயி சூழ்வினைப் படலம் - 1588
தயரதன் நிகழ்ந்ததை வினாதல்
தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்
1588.
அன்னது கண்ட அலங்கல்
மன்னன் அஞ்சி,
‘என்னை நிகழ்ந்தது?’
இவ் ஏழு ஞாலம் வாழ்வார்,
உன்னை இகழ்ந்தவர் மாள்வர்;
உற்றது எல்லாம்
சொன்னபின் என் செயல் காண்டி;
சொல்லிடு’ என்றான்.
அன்னது கண்ட - கைகேயியின் அந்தச் செயலைப் பார்த்த;
அலங்கள் மன்னன் -மாலையைப் பூண்ட அரசன்; அஞ்சி - அச்சம்
உற்று; ‘நிகழ்ந்தது என்னை - நடந்தது யாது; இஞ் ஞாலம் ஏழில்
வாழ்வார் - இவ்வேழுலகங்களில் வாழ்பவர்களுள்; உன்னைஇகழ்ந்தவர்
மாள்வர் - உன்னை இழிவுபடுத்தியவர் எவராயிருந்தாலும் என்னால்
கொல்லப்பட்டுஅழிவர்; உற்றது எல்லாம் - நிகழ்ந்தது அனைத்தையும்;
சொன்ன பின் - நீகூறிய பிறகு; என் செயல் காண்டி - என்
செய்கையைப் பார்; சொல்லிடு - காலந்தாழ்த்தாதுசொல்வாய்;’ என்றான்-
என்று சொன்னான்.
இப்பாட்டு, தயரதன் கைகேயியின் அலங்கோல நிலையினைக் கண்டு,
கொண்ட துணுக்கத்தினையும்அவள்மீது கொண்ட காதலால் அவளைத்
தேற்ற முயலுதலையும் காட்டுகிறது. என்னால் கொல்லப்படுவர்என்பான்
மாள்வர் எனத் தன்வினையால் கூறினான். சொல்லிடு; இடு- துணைவினை. 9
