கைகேயி சூழ்வினைப் படலம் - 1586
தயரதன் கைகேயியை எடுத்தல்
கைகேயியைத் தயரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்
1586.
அடைந்து , அவண் நோக்கி,
‘அரந்தை என்கொல் வந்து
தொடர்ந்தது?’ எனத் துயர்கொண்டு
சோரும் நெஞ்சன்,
மடந்தையை, மானை எடுக்கும்
ஆனையேபோல்,
தடங்கை கள் கொண்டு தழீஇ,
எடுக்கலுற்றான்.
அவண் அடைந்து - அங்குச் சென்று; நோக்கி - கைகேயியின்
நிலையைக் கூர்ந்துபார்த்துத் (துணுக்கம் கொண்டு); அரந்தை என் கொல்
வந்து தொடர்ந்தது என - துன்பம்யாது வந்து சேர்ந்தது என்று
எண்ணி; துயர்கொண்டு சோரும் நெஞ்சன் - வருத்தமடைந்து வாடும்
மனமுடையவனாய்; மானை எடுக்கும் ஆனையே போல் - பெண்மானைத்
துதிக்கையால் யானையைப்போல; தடங்கைகள் கொண்டு - தன் பெரிய
கைகளால்; மடந்தையைத் தழீஇ - அவளைக் கட்டித் தழுவி; எடுக்கல்
உற்றான் - தூக்கத் தொடங்கினான்.
