கைகேயி சூழ்வினைப் படலம் - 1583
1583.
நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்
துயின்றென்ன,
‘கவ்வை கூர்தரச் சனகி ஆம்
கடி கமழ் கமலத்து
அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து
அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என, கிடந்தனள்,
கேகயன் தனையை.
கேகயன் தனையை - கேகயன் மகளாகிய கைகேயி; நவ்வி வீழ்ந்து
என - மான் விழுந்தாற் போலவும்; நாடகம் மயில் துயின்று என்ன -
ஆடும் இயல்புடைய மயில்ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும்; ‘கவ்வை
கூர்தர - துன்பம் மிக; சனகி ஆம்கடிகமழ் கமலத்து அவ்வை -
மணங்கமலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் தாயாகிய திருமகள்; நீங்கும்
என்று - அயோத்தியை விட்டு நீங்குவாள்’ என்று கருதி; அயோத்தி
வந்து அடைந்த - அயோத்தி நகரத்தை வந்து சேர்ந்த; அம் மடந்தை
தவ்வை ஆம் என - அத்திருமடந்தையின்தமக்கையாகிய மூதேவி
என்னுமாறு; கிடந்தனள் - சோர்ந்து கிடந்தாள்.
ஓடும் மானையும் ஆடும் மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை
கூறுவது இந்நாள் வரை அவளிடம்இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.
திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு
வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது தற்குறிப்பேற்றம். அவ்வை -
தாய்; தவ்வை - தமக்கை. 4
