கைகேயி சூழ்வினைப் படலம் - 1581
1581.
விளையும் தன் புகழ் வல்லியை
வேர் அறுத்தென்ன,
கிளை கொள் மேகலை சிந்தினள்;
கிண்கிணியோடும்
வளை துறந்தனள்; மதியினில் மறுத்
துடைப்பாள்போல்,
அளக வாள் நுதல் அரும் பெறல்
திலகமும் அழித்தாள்.
விளையும்தன் புகழ் வல்லியை - வளரும் தன்புகழாகிய கொடியை;
வேர் அறுத்துஎன்ன - வேரொடு அறுத்தாற் போல; கிளை கொள்
மேகலை - ஒளியைக் கொண்ட மேகலாபரணத்தை;சிந்தினாள்-
அறுத்தெறிந்தாள்; கிண்கிணியோடும் வளைதுறந்தனள் - பாதக்
கிண்கிணியுடனே கை வளையல்களையும் கழற்றி நீக்கினாள்; மதியினில்
மறு - சந்திரனிடத்தில்இருக்கும் களங்கத்தை; துடைப்பாள்போல-
அகற்றுபவளைப் போல; அளக வாள் நுதல் -கூந்தலைச் சார்ந்து
அமைந்துள்ள ஒளிபொருந்தியநெற்றியில் உள்ள; பெறல்அரும்
திலகமும் - பெறுதற்கரிய திலகத்தையும்; அழித்தாள்-துடைத்தாள்.
மேகலையை அறுத்தெறிந்தது புகழை வேரொடும் அறுத்தது போலும்
எனவும், நெற்றியில் திலகத்தைஅழித்தது மதியின் மறுவைத் துடைத்தது
போலும் எனவும் கூறினார். இவை தற்குறிப்பேற்றம். திலகத்தின்அருமை
நோக்கி ‘அரும் பெறல்’ என்னும் அடை மொழி தந்தார். அறுத்தென்ன -
தொகுத்தல் விகாரம்.கிண்கிணி - காரணப் பெயர். கிண்கிண் என
ஒலித்தலான். 2
