குலமுறை கிளத்து படலம் - 727
சிபி
727.
‘இன் உயிர்க்கும் இன் உயிராய்
இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை
யாம் போலும். புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -
இவர் குலத்தோன். மென் புறவின்
மன் உயிர்க்கு. தன் உயிரை
மாறாக வழங்கினனால்!
மின் உயிர்க்கும்- மின்னல்போல ஒளி விடுகின்ற; நெடுவேலாய் -
நீண்ட வேல் தாங்கிய சனகனே; பொன் உயிர்க்கும் கழலவரை -
விளங்கும் வீரக் கழலைப் பூண்ட இக்குலத்து மன்னர்களை; இன்
உயிர்க்கும் - (உலகிலுள்ள) இனிமையான உயிர்கள் எல்லாவற்றிற்கும்;
இன் உயிராய்- தாம் இனிய உயிர் ஆக இருந்து; இரு நிலம் காத்தார்
- பெரிய நிலவுலகை அரசாண்டார்கள்; என்று - என்று சொல்லி;
புகழ்கிற்பாம் - புகழவல்லோம்; யாம் போலும் - நாம்தான் போலும்!
(புகழ் நம்மால் முடியாது; ஏனெனில்); இவர்குலத்தோன் - இக்
குமாரர்களின் குலத்தில் தோன்றிய அரசன் ஒருவன்; மென் பறவை -
மெல்லியபறவை ஒன்றின்; மன் உயிர்க்கு - நிலைபெற்ற உயிர்க்கு;
மாறாக - ஈடாக; தன் உயிரை - தனது ஆருயிரை; வழங்கினன் -
கொடுத்தான்.
இங்குக் கூறப் பெற்றவன் சிபி மன்னவன். இவன் நூறு அசுவ
மேதயாகம் புரிந்து நான்காம் மனுவந்தரத்தில் இந்திரனாக
அமர்ந்திருந்தவன். போலும் - ஒப்பில் போலி - எதிர்மறைப் பொருள்
தந்தது. 7
