குலமுறை கிளத்து படலம் - 726
முசுகுந்தன்
726.
‘மறை மன்னும் மணிமுடியும்
ஆரமும் வாளொடு மின்ன.
பொறை மன்னு வானவரும்
தானவரும் பொரும் ஒரு நாள்!-
விறல் மன்னர் தொழு கழலாய்!-
இவர் குலத்தோன். வில் பிடித்த
அறம் என்ன. ஒரு தனியே
திரிந்து அமராபதி காத்தோன்.
விறல் மன்னர்- வெற்றியையுடைய அரசர்கள்; தொழு கழலாய் -
பலரும் வணங்குகிற அடிகளை யுடையவனே; பொறை மன்னு -
பொறுமை மிக்க; வானவரும் - தேவர்களும்; தானவரும் -
(பொறுமையற்ற) அரக்கர்களும்; பொரும் - (முன்பு ஒருவரோடு
ஒருவர்) போர்செய்த; ஒரு நாள்- ஒரு காலத்தில்; இவர் குலத்தோன்
- இந்த மைந்தர்களது குலத்தைச் சேர்ந்தவனான ஓர் அரசன்; மறை
மன்னு - வேத விதிப்படி; (முடிசூட்டப்பெற்று); மணி
முடியும் - பொருந்திய நவரத்தின முடியும்; ஆரமும் -
மாலைகளும்; வாளொடு மின்ன - ஒளியோடு மின்னுமாறு; வில்
பிடித்த - கையில் வில்லேந்திய; அறம் என்ன - தருமதேவதை போல;
ஒரு தனியே திரிந்து - தான் ஒருவனாகவே (வாளும் கையுமாக வான்
உலகு சென்று) சஞ்சரித்து; அமராபதி காத்தோன் - (இந்திரனது)
அமராவதி நகரத்தைக் காத்து நின்றான் (முசுகுந்தன்).
முசுகுந்தன்: வானுலகில் அசுரர்கள் தேவர்களோடு போர் செய்து
அவர்களைத் துரத்தினர்; இந்திரன் முதலான தேவர்கள் இந்த
அரசனை அடைந்து உதவ வேண்டினர். அதனைக் கேட்ட மன்னவன்
வான் சென்று அசுரர்களைக் கொன்று முருகன் சேனைத்தலைவனாக
வருகின்ற வரையிலும் வானுலகைக் காத்திருந்தான். வில்பிடித்த அறம்
- இல் பொருள் உவமை. 6
