குன்றம்

bookmark

மாலை வானும் குன்றமும்
 

தங்கத்தை உருக்கி விட்ட வானோடை தன்னிலே ஓர்
செங்கதிர் மாணிக் கத்துச் செழும்பழம் முழுகும் மாலை,
செங்குத்தாய் உயர்ந்த குன்றின் மரகதத் திருமே னிக்கு
மங்காத பவழம் போர்த்து வைத்தது வையம் காண ! (31)
 

ஒளியும் குன்றும்
 

அருவிகள், வயிரத் தொங்கல் ! அடர்கொடி, பச்சைப் பட்டே !
குருவிகள், தங்கக் கட்டி ! குளிர்மலர், மணியின் குப்பை !
எருதின்மேற் பாயும் வேங்கை, நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத் தகடுகள் பார டாநீ. (32)
 

கிளி எறிதல்
 

தலைக்கொன்றாய்க் கதிரைக் கொத்தி தழைபசுஞ் சிறக டித்து
மலைப்புன்னை மரத்தின் பக்கம் வந்திடும் கிளிக்கூட் டத்தில்,
சிலைப்பெண்ணாள் கவண் எறிந்து, வீழ்த்தினேன் சிறகை என்றாள்.
குலுக்கென்று சிரித்தொ ருத்தி "கொழும்புன்னை இலைகள்" என்றாள்! (33)
 

குறவன் மயக்கம்
 

பதட்டமாய்க் கிளிஎன் றெண்ணி ஆதொண்டைப் பழம்பார்த் தானை
உதட்டினைப் பிதுக்கிக் "கோவை" உன்குறி பிழைஎன் றோதும் !
குதித்தடி மான்மான் என்று குறுந்தடி தூக்கு வானைக்
கொதிக்காதே நான் அம்மானே எனஓர் பெண் கூறி நிற்பாள்! (34)
 

குன்றச் சாரல், பிற
 

குன்றத்தின் "சாரல்", குன்றின் அருவிகள் குதிக்கும் "பொய்கை"
பன்றிகள் மணற்கி ழங்கு பறித்திடும் "ஊக்கம்" நல்ல
குன்றியின் மணியால், வெண்மைக் கொம்பினால் அணிகள் பூண்டு
நின்றிடும் குறத்தி யர்கள் "நிலாமுகம்" பாரடா நீ! (35)
 

குறத்தியர்
 

"நிறைதினைக் கதிர்" முதிர்ந்து நெடுந்தாளும் பழுத்த கொல்லைப்
புறத்தினில் தேர் போல் நீண்ட புதுப்பரண் அமைத்து, மேலே
குறத்தியர் கவண் எடுத்துக் குறிப்பார்க்கும் விழி, நீ லப்பூ!
எறியும்கை, செங்காந் தட்பூ! உடுக்கைதான் எழில்இ டுப்பே! (36)
 

மங்கிய வானில் குன்றின் காட்சி
 

மறைகின்றான் பரிதி; குன்ற மங்கையோ ஒளியிழந்து,
நிறைமூங்கில் இளங்கை நீட்டி வாராயோ எனஅ ழைப்பாள்!
சிறுபுட்கள் அலறும்! யானை இருப்பிடம் சேரும்! அங்கோர்
குறுநரி ஊளைச் சங்கால் இருள் இருள் என்று கூவும்! (37)
 

நிலவும் குன்றும்
 

இருந்தஓர் கருந்தி ரைக்குள் இட்டபொற் குவியல் போலே,
கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே கருத்துக்கள் இருத்தல் போலே
இருள்மூடிற் றுக்குன் றத்தை! நாழிகை இரண்டு செல்லத்
திரும்பிற்று நிலவு ; குன்றம் திகழ்ந்தது முத்துப் போலே! (38)
 

எழில் பெற்ற குன்றம்
 

நீலமுக் காட்டுக் காரி நிலாப்பெண்ணாள், வற்றக் காய்ந்த
பாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை
மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின்மேல் வீசி விட்டாள்!
ஏலுமட் டுந்தோ ழாநீ எடுத்துண்பாய் எழலை எல்லாம்! (39)
 

முகில் மொய்த்த குன்றம்
 

ஆனைகள், முதலைக் கூட்டம், ஆயிரம் கருங்கு ரங்கு,
வானிலே காட்டி வந்த வண்முகில் ஒன்று கூடிப்
பானயில் ஊற்று கின்ற பதநீர்போல் குன்றில் மொய்க்கப்
போனது. அடிமை நெஞ்சம் புகைதல்போல் தோன்றும் குன்றம்! (40)