கார்முகப் படலம் - 812

bookmark

சீதையின் உறுதிப்பாடு

812.    

‘இல்லையே நுசுப்பு’ என்பார்.
   ‘உண்டு. உண்டு’ என்னவும்.
மெல்லியல். முலைகளும்.
   விம்ம விம்முவாள்;
‘சொல்லிய குறியின். அத்
   தோன்றலே அவன்;
அல்லனேல். இறப்பென்’ என்று.
   அகத்துள் உன்னினாள்.
 
நுசுப்பு  இல்லையே- (இவளுக்கு)  இடையானது இல்லவே இல்லை;
என்பார் - என்று சொல்பவர் (உடல் பூரித்துள்ள  இப்போது  இடையும்
தோன்ற)   ;  உண்டு  உண்டு  என்னவும் -  (இடை)   இருக்கின்றது
இருக்கின்றது  என்று  சொல்லவும்;  மெல்லியல் - சீதை; முலைகளும்
விம்ம   -   தனங்களும்  பருக்க;  விம்முவாள்  -  (தானும்)  உடல்
பூரிப்பவளாய்;   சொல்லிய    குறியின்    -    (இவள்)   சொன்ன
அடையாளங்களால்; அவன் - வில்லை முறித்தவன்; அத்தோன்றலே -
(நான்  கன்னி  மாடத்திலிருந்து  கண்ட)   அந்த   ஆடவனேயாவான்;
அல்லனேல்  -  (அப்படி)  அவனாக  இல்லாவிட்டால்; இறப்பென் -
உயிரை  விட்டொழிப்பேன்;  என்று  அகத்துள்  - என்று மனத்திலே;
உன்னினாள் - உறுதி கொண்டாள்.  

     என்னவும்: இசை நிறை; முலைகளும்; இறந்தது தழீஇய எச்சம்.  63