கார்முகப் படலம் - 811
சீதை ஐயம் நீங்குதல்
சீதை தன் ஐயம் நீங்கலும் அகத்துள் உறுதி பூணலும்
811.
‘கோமுனியுடன் வரு கொண்டல்” என்ற பின்.
‘தாமரைக் கண்ணினான்’ என்ற தன்மையால்.
‘ஆம்; அவனேகொல்’ என்று. ஐயம் நீங்கினாள்;
வாம மேகலையினுள் வளர்ந்தது. அல்குலே!
கோ முனியுடன்- பெருமை மிக்க முனிவனுடன்; வரு கொண்டல்-
வந்த மேகம் போன்றவன்; என்றபின் - என்று கூறிய பின்பு;
தாமரைக் கண்ணினான் - தாமரைக் கண்ணனான திருமாலைப்
போன்ற ஆற்றல் உடையவன்; என்ற தன்மையால் - என்று சொல்லிய
வகையால்; ஆம் அவனே கொல் - (சீதை) அப்பொழுது (கன்னி
மாடத்து அருகே) கண்ட அவனே போலும்; என்று ஐயம் நீங்கினாள்-
என்று தான் கொண்ட சந்தேகம் (சிறிது) நீங்கப் பெற்றாள்; வாம
மேகலையினுள் - அழகிய மேகலை அசைய; அல்குல் வளர்ந்தது-
(அவளது) இடைப்பக்கம் பருத்தது.
தோழியின் வார்த்தையால் வில்லிறுத்தவன் தான்கண்ட ஆடவனே
என்று துணிந்து மனத்திலிருந்த சந்தேகத்தைச் சிறிது நீக்கினாள் சீதை
என்பது. 62
