கார்முகப் படலம் - 810

bookmark

810.    

‘மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்
“சூத்திரம் இது” என. தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;
வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!
 
மாத்திரை   அளவில்- ஒரு நொடிப்பொழுதில்;  தாள் மடுத்து -
(அவ்வில்லின்   அடிப்பக்க   முனையை)   தன்  காலால்    மிதித்துக்
கொண்டு; முன் பயில் சூத்திரம் - முன்பு பழகிய இயந்திரம்; இது என
-  இதுவெனக் (கண்டவர்) கருதுமாறு; தோளின் வாங்கினான் - (அந்த
இராமன்)  தன்  தோள்வலியால்  அதனை  வளைத்தான்   (அப்போது);
இமையவர்  - தேவர்கள்; ஏத்தினர் - (இராமனைப்) புகழ்ந்தார்கள்; பூ
மழை - மலர் மழை; இழிந்த - (வானத்திலிருந்து) பொழிந்தது; வேந்து
அவை  - (அந்த வில்) அரச சபையினர்;  நடுக்குற -  நடுநடுங்கும்படி;
முறிந்து வீழ்ந்தது - இடையே முறிந்து கீழே விழுந்து விட்டது.  

அவை - ஆகுபெயர்.                                    61