கார்முகப் படலம் - 807

bookmark

வில் முறிந்ததை நீலமாலை கூறுதல் (807-810)

807.    

‘கய ரத துரகமாக் கடலன். கல்வியன்.
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்.
புயல் பொழி தடக் கையான். புதல்வன்; பூங் கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்;
 
கயம்  ரதம்- யானையும் தேரும்; துரகம் மாகடலன் - குதிரையும்
ஆகியவற்றைக்     கடலெனப்    படைத்தவனும்;    கல்வியன்    -
பெருங்கல்வியில்  மேம்பட்டவனும்;  புயல்  பொழி  தடக்கையான் -
மேகம்   மழை   பொழிவதுபோல்   செல்வம்    பொழிகின்ற   நீண்ட
கையையுடையவனுமான;  தயரதன் எனும் - தசரதன் என்று;  பெயர்த்
தனிச்   செல்   -  உலகம்  புகழத்  தனிச்  செங்கோல்  செலுத்தும்;
நேமியான்  -  பெருமன்னனின்;  புதல்வன் -  மைந்தன்;  பூங்கணை
மயல்   விளை   -   மலர்   அம்புகளால்  உலகத்தில்  மயக்கத்தை
உண்டாக்கும்;   மதனற்கும்   -   மன்மதனைக்   காட்டிலும்;  வடிவு
மேன்மையான் - வடிவழகு மிக்கவன் (ஒருவன் இருக்கின்றான்).     58