கார்முகப் படலம் - 805
தோழி நீலமாலை வருதல்
நீலமாலை உரைத்த மகிழ்ச்சிச் செய்தி
கலி விருத்தம்
805.
வடங்களும் குழைகளும் வான வில்லிட.
தொடர்ந்த பூங் கலைகளும் குழலும் சோர்தர.
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்.
நெடுந் தடங் கிடந்த கண் நீலமாலையே.*
நெடுந் தடம் கிடந்த- பெரிய தடாகத்தில் கிடந்த;கண்நீலமாலை -
குவளை போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள்; வடங்களும்
- (தன் கழுத்தில் பூண்ட) ஆரங்களும்; குழைகளும் - காதணியான
குழைகளும்; வானவில் இட - வானவில்லைப் போலப் பல நிற
ஒளிகளை வீசவும்; தொடர்ந்த பூங்கலைகளும் - உடுத்த உடையும்;
குழலும் சோர்தர - மலரணிந்த கூந்தலும் அவிழ்ந்து சரியவும்;
நுடங்கிய மின் என - துவண்ட மின்னல் போல; நொய்தின்
எய்தினாள் - விரைவாக ஓடி வந்தாள்.
சீதைக்குத் திருமணம் நடக்குமாறு இராமன் வில் முறித்த
செய்தியை விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு சீதை
இருக்குமிடம் வந்தாள் என்பது.
தோழியின் பெயர் நீலமாலை. வானவில் இடுதல் - இந்திரவில்லின்
தன்மையவாய்ப் பலநில ஒளி வீசுதல். ‘திருவில் இட்டுத் திகழ்தரு
மேனியன்’ - சிலப். 15-156. 56
