கார்முகப் படலம் - 803

bookmark

803.    

‘பெய் கடல் பிறந்து. அயல்
   பிறக்கொணா மருந்து பெற்று.
ஐய பொற் கலத்தொடு அங்கை
   விட்டு இருந்த ஆதர்போல்.
மொய் கிடக்கும் அண்ணல் தோள்
   முயங்கிடாது முன்னமே.
கைகடக்க விட்டு இருந்து
   கட்டுரைப்பது என்கொலோ?’
 
பெய்     கடல் பிறந்து - பல வளங்களும் நிறைந்த பாற்கடலிலே
தோன்றி;  அயல்  பெறற்கு  ஒணா  -  வேறிடத்தில்  பெற முடியாத;
மருந்து   பெற்று   -   அமுதத்தைத்   தம்  நல்வினைப்  பயனால்
அடைந்தும்;  ஐய  பொன் கலத்தொடு - (அதனை உடனே பருகாமல்)
அழகிய பொன்கலசத்தோடு; அம்கை விட்டிருந்து - தம் கையிலிருந்து
அதனை  நழுவவிட்ட;  ஆதர்போல் - அறிவற்ற மூடர்களைப் போல;
மொய் கிடக்கும்   -   வலிமை  மிக்க;  அண்ணல்தோள்  -  அப்
பெருமானின் தோள்கள் (காணப் பெற்றும்); முன்னமே முயங்கிடாது -
(கண்ட) அப்போதே தழுவிக் கொள்ளாமல்; கைக் கடக்க - கைநழுவிப்
போகும்படி;  விட்டிருந்து -  விட்டொழித்துப்  பின்; கட்டுரைப்பது -
தனியிருந்து பலவாறாகக் கூறிப் புலம்புவது; என்கொல் - எதற்காக?

அமுதம்     கண்ணிற்பட்டால்   உடனே    அது    நிறைந்துள்ள
பொற்கலத்தைக்   கைப்பற்றி   உண்பது  முறை.   ஆனால்.  அப்படிச்
செய்யாது   கைநழுவவிட்ட   மூடர்போல    இராமனைக்   கண்ணால்
கண்டபோது  நான்  அவனைத்  தழுவிக்   கொள்ளாமல்  விட்டுவிட்டு
இப்போது  பலவாறு  பேசி  என்ன பயன்’  என்கிறாள் சீதை. ஆதர் -
அறிவில்லாதவர்.                                           54