கார்முகப் படலம் - 802

bookmark

802.

‘விண்ணுளே எழுந்த மேகம்
   மார்பின் நூலின் மின்னொடு. இம்
மண்ணுளே இழிந்தது என்ன.
   வந்து போன மைந்தனார்.
எண்ணுளே இருந்த போதும்.
   யாவரென்றுதோகிலென்;
கண்ணுளே இருந்த போதும்.
   என்கொல் காண்கிலாதவே?
 
விண்ணுள் - வானத்தில்; எழுந்த மேகம் - தோன்றிய மேகமானது;
மின்னொடு  -  மின்னலுடன்;  இம்  மண்ணுள் - இந்த மண்ணுலகில்;
இழிந்தது  என்ன - இறங்கியது என்று சொல்லுமாறு; மார்பின் நூலின்
-   மார்பில்   அணிந்துள்ள   முப்புரி   நூலுடன்;   வந்துபோன  -
(கன்னிமாடத்தின்  முன்  என்   கண்கள்  காணுமாறு)    வந்து சென்ற;
மைந்தனார்  -  அப்பிரான்;  எண்ணுளே  -  என் மனத்திற்குள்ளே;
இருந்தபோதும் -  நீங்காது  இருந்தாலும்;  யாவர்  என்று  -  இவர்
யாரென்று;   தேர்கிலேன்   -   தெரிந்து   கொள்ள  முடியவில்லை;
கண்ணுளே  -   (என்)   கண்களுக்கு   எதிரே;  இருந்தபோதும்  -
காணப்பட்டாலும்;  காண்கிலாதது - (இன்னாரென்று) அறிந்து கொள்ள
முடியாமல் இருப்பதற்குக் காரணம்; என்கொல் - என்ன?

கண்ணிற்குள்ளே     இருப்பவரை   இன்னாரென்று   காணாமையும்
காலத்தாலும்  இடத்தாலும்  சேய்மையானவற்றையும்  அறியவல்ல  மனம்
தன்னுள்   இருப்பவரை    இன்னாரென்று   தெரியாமல்    இருப்பதும்
வியப்பானதே  என்று  சீதை  கூறுகிறாள். பூணூல்  தரித்த  இராமனுக்கு
மின்னலோடு கூடிய மேகம் உவமையானது.                      53