கார்முகப் படலம் - 801

bookmark

801.    

‘அடர்ந்து வந்து. அனங்கன். நெஞ்சு
   அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்நின்று
   வெந்திடாது எழுந்து. வெங்
கடம் துதைந்த காரி யானை
   அன்ன காளை தாள் அடைந்து.
உடன்தொடர்ந்து போன ஆவி
   வந்தவா என்? - உள்ளமே!
 
உள்ளமே    - என் மனமே;   அனங்கன்  - மன்மதன்; நெஞ்சு
அழன்று  - மனம் கொதிக்குமாறு; அடர்ந்து வந்து - நெருங்கி வந்து;
சிந்தும் அம்பு  எனும்  விடம் - நஞ்சு தோய்ந்த அம்பு; குடைந்த -
குடைதலினால்; மெய்யின் நின்று - உடம்பினுள்நிலைத்து; வெந்திடாது
எழுந்து  - வெந்தழியாமல்  வெளிப்பட்டு;  வெங்கடம்  துதைந்த  -
வெப்பமான   மதநீர்  பெருகும்;  காரி  யானை  அன்ன  -  கறுத்த
யானையைப்  போன்ற;  காளை  தாள்  அடைந்து - காளை போன்ற
பிரானுடைய  திருவடிகளைச் சரணடைந்து; உடன் தொடர்ந்துபோன -
அவனோடு  தொடர்ந்து  சென்ற; ஆவி - என் உயிரானது; வந்தவா -
திரும்பி வந்த விதம்; என் - என்னவோ?

‘அனங்கன்     எய்த  அம்பால்  வெந்த    உடம்பிலிருந்து  தான்
வேகாதிருக்கத்  தப்பி  வந்த  என்னுயிர் தொடர்ந்து  சென்று  இராமன்
திருவடியைச்    சரணடைந்தும்      இப்போது    துன்பப்    படுமாறு
திரும்பிவந்ததே!  இது வியப்பாக உள்ளது’  என்று  இரங்கிக் கூறுகிறாள்
சீதை.                                                    52