கார்முகப் படலம் - 799
799.
‘இளைக்கலாத கொங்கைகாள்!
எழுந்து விம்மி என் செய்வீர்?
முளைக்கலா மதிக்கொழுந்து
போலும் வாள் முகத்தினான்.
வளைக்கலாத விற் கையாளி.
வள்ளல். மார்பின் உள்ளுறத்
திளைக்கல் ஆகும்ஆகில். ஆன
செய் தவங்கள் செய்ம்மினே!
இளைக்கலாத - இளைக்காது பருத்து வரும்; கொங்கைகாள் -
தனங்களே; எழுந்து விம்மி - (நீங்கள்) மேன்மேல் எழுந்து பருத்து
வருதலால்; என் செய்வீர் - என்ன காரியத்தைச் சாதித்து விடுவீர்?;
முளைக்கலா - வானில் தோன்றாத; மதிக் கொழுந்து போலும் -
என்றும் ஒரு தன்மைத் தாயுள்ள சந்திரனைப் போன்ற; வாள்
முகத்தினான் - ஒளியுள்ள முகத்தை யுடையவனும்; வளைக்கலாத வில்
- (யாராலும்) வளைக்கமுடியாதபடி அரிதான வில்லை; கை ஆளி
வள்ளல் - கையில் ஏந்தியவனுமாகிய அருள்மிக்க அவனுடைய;
மார்பினுள்- திருமார்பை; உறத் திளைக்கலாகும் ஆகில் - இறுகத்
தழுவக் கூடிய வழி ஏற்படுமாயின்; ஆன செய்தவங்கள் - அதற்கேற்ப
செய்யத் தக்க தவங்களை; செய்ம்மினே - செய்யுங்கள்.
‘கொங்கை முளைத்தெழுவதன் பயன் அவனது மார்பைத் தழுவிக்
கொள்ளுதலேயாகும். அந்த நிலை கிடைப்பதற்கான வழி இருந்தால்
அதைச் செய்யுங்கள். அதைவிட்டு நீங்கள் எழுந்து விம்முவதால்
பயன் எதுவுமில்லை’ என்று சீதை கூறுகிறாள். 50
