கார்முகப் படலம் - 794

bookmark

794.    

ஊசல் ஆடு உயிரினோடும்.
   உருகு பூம் பள்ளி நீங்கி.
பாசிழை மகளிர் சூழ.
   போய். ஒரு பளிக்கு மாட.
காசு இல் தாமரையின் பொய்கை.
   சந்திர காந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ்
   சேக்கையை அரிதின் சேர்ந்தாள்.
 
ஊசல்   ஆடு- (சீதை) ஊஞ்சல் போலப்  போவதும்  வருவதுமான;
உயிரினோடும் -  உயிருடன்; உருகு பூம்பள்ளி  நீங்கி  -   உடம்பு
உருகுவதற்குக் காரணமான மலர்ப் படுக்கையை விட்டு நீங்கி;  பாசிழை
மகளிர்  -  பசும்பொன்  அணிகள்  பூண்ட  மகளிர்; சூழப் போய் -
சூழ்ந்து  வர (அவ்விடத்தை விட்டுப்) போய்; காசு இல் தாமரையின் -
குற்றமற்ற  தாமரைத்;  பொய்கை  -  தடாகத்தின் கரையிலுள்ள; ஒரு
பளிங்குமாடம்  -   பளிங்கு   மாடத்தில்;  சந்திரகாந்தம்  ஈன்ற -
சந்திரகாந்தக்  கற்கள்  வெளிப்படுத்துவதும்;  சீதம்  நீர்  தெளித்த -
குளிர்ந்துள்ளதுமான   நீர்   தெளித்த;   மென்பூஞ்  சேக்கையை  -
மென்மையான  பூம்படுக்கையை;  அரிதின்  சேர்ந்தாள்  - அரிதிலே
சேர்ந்தாள்.

சீதை     முன்னிருந்த மலர்ப் படுக்கையை   விட்டுத்    தாமரைத்
தடாகத்தின்   கரையிலிருக்கும்  பளிங்கு    மாடத்தில்  அமைத்துள்ள.
சந்திரகாந்தக்  கற்கள்  வெளிக்கக்கும்  குளிர்ந்த   நீர் தெளித்த மலர்ப்
படுக்கையில்   சிரமப்பட்டுச்     சேர்ந்தாள்   என்றார்.  சந்திரகாந்தம்:
நிலவைக்  கண்ட  இடத்து  நீரைக்    கக்குவதொரு  கல்  தாமரையின்
பொய்கைப் பளிக்குமாடம் என இயைபுடுத்தவேண்டும்.             45