கார்முகப் படலம் - 787
787.
நல் இயல் மகர வீணைத்
தேன் உக. நகையும் தோடும்
வில் இட. வாளும் வீச.
வேல் கிடந்தனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன
முகத்தியர். எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும்
தோகையின் ஆடினாரே!
வேல் கிடந்து அனைய- வேல் தங்கியது போன்ற; நாட்டத்து -
கண்களையும்; எல்லியல் மதியம் அன்ன - இரவில் எழும் சந்திரன்
போன்ற; முகத்தியர் - முகத்தையும் உடைய மங்கையர்கள்; சொல்லிய
பருவம் - (மேகம் வரக்கூடிய) கார்ப் பருவத்தில்; எழிலி தோன்ற -
(வானத்தில் மேகங்கள் காணப்பட; தோகையின் - மயில்கள்
ஆடுவதுபோல; நல் இயல் - நல்லிலக்கணம் அமைந்த; மகரவீணைத்
தேன் உக - மகரயாழின் இசைத் தேன் சிந்தவும்; நகையும் தோடும் -
புன்சிரிப்பும் காதணியும்; வில் இட வாள் வீசு - முறையே ஒளியைப்
பரப்பிவிடவும்; ஆடினர் - ஆடினார்கள்.
பற்களின் ஒளி விடாது தோன்றுவதால் ‘வில்இட’ என்றும்.
காதணிகள் விட்டுவிட்டு ஒளிவிடுவதால் ‘வாள்வீச’ என்றும் இவற்றால்
வில்லையும் வாளையும் வீசிக்கொண்டு மகளிர் ஆடினர் என்பது
நயம். 38
