கார்முகப் படலம் - 784

bookmark

வில் முறிந்ததால் எழுந்த ஒலி

வில் இற்ற ஓசையால் மூவுலகத்தும் தோன்றிய அச்சம் 
 
784.

‘ஆரிடைப் புகுதும் நாம்?’ என்று.
   அமரர்கள். கமலத்தோன்தன்
பேருடை அண்ட கோளம்
   பிளந்தது’ என்று ஏங்கி. நைந்தார்;
பாரிடை உற்ற தன்மை
   பகர்வது என்? பாரைத் தாங்கி.
வேரெனக் கிடந்த நாகம்
   இடி என வெருவிற்று அன்றே!
  
அமரர்கள்     - (வில் முறிந்த ஓசையைக்   கேட்ட)   தேவர்கள்;
கமலத்தோன்தன் -  பிரமன்  படைத்த; பேருடை அண்ட கோளம்-
பெரிய  அண்ட கோளமே; பிளந்தது என்று - பிளந்து விட்டது என்று
கருதி;  ஏங்கி  -  ஏக்கம் கொண்டு; ஆர் இடை - இனி எவரிடத்தில்;
நாம் புகுதும் என்று - நாம் அடைக்கலம் புகுவோம் என்று; நைந்தார்
- வருந்தினார்கள்; பார் இடை உற்ற - (விண்ணுலகமே இவ்வாறாயின்)
இம்  மண்ணுலகில்  நிகழ்ந்த; தன்மை பகர்வது என் - தன்மை பற்றி
நாம்  சொல்ல  வேண்டுவது  என்ன  உள்ளது?;  பாரைத்  தாங்கி -
பூமியின்  கீழ்  அதைத்  தாங்கிக்  கொண்டு;  வேர்  எனக் கிடந்த-
இந்தப்  பூமியின்  வேர்போலக்  கிடக்கின்ற;  நாகம்  -  ஆதிசேடன்
என்னும்  நாகமும்;  இடி  என  - இடி (தன்மேல்) விழுகின்றதென்று;
வெருவிற்று - கருதி அஞ்சுவதாயிற்று.

அவ்     வில் இற்றதனால் தோன்றிய ஓசை விண்.   மண். பாதலம்
என்னும்    மூவுலகத்தார்க்கும்    அச்சம்      விளைத்தது   என்பது.
கமலத்தோன்தன் பேருடையண்டம் - பிரமாண்டம்.               35