கபிலர்

கபிலர்

bookmark

வாழ்க்கை வரலாறுகபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும். இவர் இயற்றிய பாடல்களுள் மிகச்சிறந்து விளங்குவது பத்துப்பாட்டிலுள்ள குறிஞ்சிப்பாட்டு ஆகும். ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்கு தமிழ் அறிவித்தற்கு இப்பாட்டினைப்பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தில் பூத்துக் கிடந்த 99 பூக்களையும், சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவையும் குறிப்பிட்டுப்பாடியுள்ளார். இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் குறிஞ்சித் திணை பற்றி பாடுவதில் தேர்ந்தவர். கலித்தொகையில் குறிஞ்சிக் கலி, பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றிய நூறு பாடல்களை பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளதால் குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறலாம்.