கண்ணம்மா என் காதலி - 1

கண்ணம்மா என் காதலி - 1

bookmark


செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரஸங்கள் : சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
  சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
  வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
  பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
  நக்ஷத் திரங்க ளடீ! 1

சோலை மல ரொளியோ - உனது
  சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
  நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
  குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
  மருவக் காதல் கொண்டேன். 2

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
  சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
  சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
  முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
  கன்னத்து முத்த மொன்று! 3