கண்ணன் - என் அரசன்

கண்ணன் - என் அரசன்

bookmark


பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
  பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
  நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்.    1

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
  கண்ணிற் காண்ப தரினெத் தோன்றுமே
எண்ணமிட்டெண்ண மிட்டுச் சலித்துநாம்
  இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே. 2

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
  பணமுண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'
  என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான். 3

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
  கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
  மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். 4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
  மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிர்க்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள்
  தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான்.    5

காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
  கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
  நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? 6

நாம வனவலி நம்பியி ருக்கவும்,
  நாணமின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
  சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான்.    7

தந்திரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
  சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
  வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான்.    8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
  கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
  அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். 9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
  வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
  பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். 10

சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
  தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண் மொன்றுண்டோ?
  இதனுள் ளேபகை மாய்த்திட வல்லவன்காண்! 11

கண்ண னெங்கன் அரசன் புகழினைக்
  கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருங்கவந் தேனெனைத்
  தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். 12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
  நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
  வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். 13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
  கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
  அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! 14