கண்ணன்- எனது சற்குரு

கண்ணன்- எனது சற்குரு

bookmark


புன்னாகவராளி - ரஜாதி - ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
  சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
  கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
  மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
  ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. 1

நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
  நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
  ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி
கூடுமுகமும், தெளிவுதான் - குடி
  கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
  சங்கதி பேசி வருகையில், 2

என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
  இன்புற் றுரைத்திட லாயினர் -"தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
  நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
  மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் - அவன்
  சத்தியங் கூறுவன்" என்றனர். 3

மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
  வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
  நன்மை தருகெனவேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
  காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
  போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், 4

ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
  ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல
  வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் -'சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
  நாளுங் கவலையில் மூழ்கினோன்; -தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா -உண்மை
  பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' 5

என்று கருதி யிருந்திட்டேன்; -பின்னர்
  என்னைத் தனியிடங் கொண்டுபோய், - "நினை
நன்று மருவுக! மைந்தனே! - பர
  ஞான முரைத்திடக் கேட்பை நீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
  ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
  விண்ணை யளக்கும் அறிவுதான்! 6

சந்திரன் சோதி யுடையதாம் - அது
  சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
  சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
  மாயக் களிப்பெருங் கூத்துக் காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
  சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7

"ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; - கடல்
  ஆருங் குமிழி உயிர்களாம், - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
  சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
  மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
  நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8

"சித்தத்தி லேசிவம் நாடுவார்; - இங்கு
  சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
  வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
  நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநத்தம் - எனச்
  சூழ்ந்து கவலைகள் தள்ளியே. 9

"சோதி அறிவில் விளங்கவும் - உயர்
  சூழ்ச்சி மதியில் விளங்கவும் -அற
நீதி முறைவழு வாமலே - எந்த
  நேரமும் பூமித் தொழில் செய்து -கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
  உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே -இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
  மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில்,    10

ஆடுதல், பாடுதல். சித்திரம் - கவி
  யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
  ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
  நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
  காவனம் என்றதைப் போற்றலாம். 11

"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
  ஞானம் விரைவினில் எய்துவாய்" - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
  செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
  ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
  ஆட லுலகென நான் கண்டேன்! 12