கண்ணன் என் காதலன் - 5

கண்ணன் என் காதலன் - 5

bookmark


ராகம்- பிலஹரி

ஆசை முகமறந்து போச்சே - இதை
  ஆரிடம் சொல் வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
  நினைவு முகமறக்க லாமோ? 1

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
  கண்ண னழகுமுழு தில்லை;
நண்ணு முகவடிவு கானில் - அந்த
  நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். 2

ஓய்வு மொழிதலு மில்லாமல் - அவன்
  உறவை நினைத்திருக்கும் உள்ளம்;
வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த
  மாயன் புகழினையெப் போதும். 3

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
  கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
  பேதையை முன்புகண்ட துண்டோ ? 4

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
  சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
  வைய முழுதுமில்லை தோழி! 5

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
  கண்க ளிருந்து பயனுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
  வாழும் வழியென்னடி தோழி? 6