கண்ணன் என் காதலன் - 3

கண்ணன் என் காதலன் - 3

bookmark

ஹிந்துஸ்தானி தோடி - ஆதி தாளம்
ரஸங்கள்: பயாநகம், அற்புதம்

திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

1.  மிக்க நலமுடைய மரங்கள்; - பல
  விந்தைச் சுவையுடைய கனிகள்; - எந்தப்
  பக்கத்தையும் மறைக்கும் வரைகள்; - அங்கு
  பாடி நகர்ந்து வரு நதிகள்; - ஒரு (திக்குத்)

2.  நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
  நீளக் கிடக்குமிலைக் கடல்கள், - மதி
  வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
  மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள், - ஒரு    (திக்குத்)

3.  ஆசை பெறவிழிக்கும் மான்கள், - உள்ளம்
  அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
  நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
  நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு (திக்குத்)

4.  தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
  சத்தத் தினிற்கலங்கும் யானை - அதன்
  முன்னின் றோடுமிள மான்கள் - இவை
  முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு (திக்குத்)

5.  கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
  கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
  வேல்கைக் கொண்டுகொலை வேடன் - உள்ளம்
  வெட்கங் கொண்டொழிய விழித்தான் - ஒரு (திக்குத்)

6.  "பெண்ணே, உனதழகைக் கண்டு - மனம்
  பித்தங்கொள்ளு" தென்று நகைத்தான் -"அடி
  கண்ணே, எனதிருகண் மணியே - உனைக்
  கட்டித் தழுவமனம் கொண்டேன்.

7.  சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
  துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
  தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன் - நல்ல
  தேங்கள் ளுண்டினிது களிப்போம்!"

8.  என்றே கொடியவிழி வேடன் - உயிர்
  இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
  நின்றே இருகரமுங் குவித்து - அந்த
  நீசன் முன்னர் இவை சொல்வேன்.

9.  "அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
  அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
  கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை - உன்றன்
  கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?"

10.  "ஏடீ, சாத்திரங்கள் வேண்டேன்; - நின
  தின்பம் வேண்டுமடி, கனியே! - நின்றன்
  மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
  மொந்தைப் பழையகள்ளைப் போலே!"

11.  காதா லிந்தவுரை கேட்டேன் - 'அட
  கண்ணா!' லென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
  போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
  போதந் தெளியநினைக் கண்டேன்.

12.  கண்ணா! வேடனெங்கு போனான்? -உனைக்
  கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
  வண்ணா! என தபயக் குரலில் - எனை
  வாழ்விக்க வந்த அருள் வாழி!