கண்ணன் என் காதலன் - 1

கண்ணன் என் காதலன் - 1

bookmark


செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரஸம்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
  சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
  நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
  கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
  வெறுத்து விட்ட தடீ! 1

பாயின் மிசை நானும் - தனியே
  படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
  சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
  வளர்த்துப் பேசிடுவீர்,
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
  நுங்க ளுறவையெல் லாம். 2

உணவு செல்லவில்லை; - சகியே!
  உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை; - சகியே!
  மலர் பிடிக்கவில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
  குழப்பம் வந்த தடீ!
கணமும் உள்ளத்திலே - சுகமே
  காணக் கிடைத்த தில்லை. 3

பாலுங் கசந்த தடீ! - சகியே
  படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
  குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
  நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
  படுத்து மென்று விட்டான். 4

கனவு கண்டதிலே - ஒருநாள்
  கண்ணுக்குத் தோன்றாமல்
இனம் விளங்க வில்லை - எவனோ
  என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண் விழித்தேன்; - சகியே!
  மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
  மகிழ்ச்சி கண்ட தடீ! 5

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
  உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
  மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
  இன்பம் விளைந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
  அழகு வந்ததடீ! 6

எண்ணும் பொழுதிலெல்லாம் - அவன்கை
  இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ! புதிதோர்
  சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
  யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
  கண்ணின் முன் நின்றதடீ! 7