கண்டராதித்த சோழன் (கி.பி.950-951)
பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராஜாதித்யர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
