கடிமணப் படலம் - 1343

bookmark

இராமன் பிராட்டியோடு பள்ளி அடைதல்.
 
1343.    

நூற் கடல் அன்னவர் சொற் கடன்நோக்கி.
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்.
கால் கடல்போல் கருணைக்கடல்; பண்டைப்
பாற்கடல் ஒப்பது ஒர் பள்ளி அணைந்தான்.
 
கால்கடல்   போல் கருணைக்கடல் - (நீர்பொங்கும்) கருநிறமுள்ள
கடல்  அனைய  கருணைபொங்கும் கடலாகிய இராமபிரான்;  நூல்கடல்
அன்னவர்   சொல்  கடன்   நோக்கி   -   கடல்   போன்றுள்ள
நூல்களைக்கற்று     உயர்ந்த      பெரியோர்கள்      சொல்லியுள்ள
(சாத்திரங்களது)   சொற்களின்   முறைமையை    நோக்கி;  மால்கடல்
பொங்கும்  மனத்தவளோடும்  - கடல் எனப்பொங்கும் ஆசையுடைய
மனத்தவளாகிய   சீதையோடும்;  பண்டைப்  பாற்கடல்  ஒப்பதோர்
பள்ளியடைந்தான்  -  தொன்று தொட்டுத்  தான்  பள்ளிக்கொள்ளும்
பாற்கடலில் உள்ள  ஆதிசேடப்பள்ளி  போன்றதொரு  திருப்பள்ளியைச்
சென்றடைந்தான்.

கடலில்  நீர் பொங்கும்;பெருமான் உள்ளத்தில் கருணை பொங்கும்.
கடல்  நீருக்கு  அளவு  இல்லைபோல.  இவன்  உள்ளத்திற் பொங்கும்
கருணைக்கும்     அளவில்லையென்க.     கருணை    அலையடிக்கும்
கண்ணாளன் என்பார். “கார்க்  கடல்  அன்ன கருணைக்கடல்” என்றார்.
கால்  -  கருமை:  காற்றுமாம்  -  இராமபிரான்   கருணையின்  கடல்;
பிராட்டியோ  அவன்  மேல்  வைத்த அன்பின் கடல்  என்பார்  “மால்
கடல்  அன்ன  மனத்தவளோடும்”   என்றார்.  தெய்வத்  தம்பதியர்க்கு
இச்சடங்குகள்  எல்லாம் தேவையோ  என்னும்  வினாவை  ஆசங்கித்து.
மக்கள்   வாழ.   வாழ்ந்து  காட்டப்பிறந்தவன்   ஆதலின்.   கற்றோர்
சொற்படி  நடந்தான்  என்பார்.  “நூல்கடல்   அன்னவர்   சொற்கடன்
நோக்கி” என்றார்.                                         98