கடிமணப் படலம் - 1334

bookmark

பாணிக் கிரகணம்

இராமன் சீதையுடன் தீவலம் வருதல்
 
1334.    

வெய்ய கனல்தலை வீரனும். அந் நாள்.
மை அறு மந்திரம் மும்மை வழங்கா.
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்.
தையல் தளிர்க் கை தடக் கை பிடித்தான்.
 
வீரனும்  அந்நாள்  -  மாவீரனாகிய  இராமபிரான்  அப்பொழுது;
மையறு  மந்திரம்  மும்மை வழங்கா - குற்றமற்ற மந்திரங்களை மும்
முறை    கூறி; வெய்ய  கனல்  தலை - வெம்மை  மிக்க  தீயின்கண்;
நெய் அமை ஆவுதி  யாவையும்  நேர்ந்தான்  - நெய்யோடு கூடிய
அவியுணவுள்    யாவற்றையும்    பெய்தான்.   (அதன்பின்);   தையல்
தளிர்க்கை  தடக்கை பிடித்தான்  -  அழகிய  சீதையினுடைய தளிர்
அனைய   மெல்லிய   கரத்தினைத்  தனது   அகன்ற   திருக்கரத்தாற்
பற்றினான்.

மும்மை     வழங்குதல்  என்பது  மந்திரத்தை  உச்சரித்து நெய்யை
மும்முறை  மண்ணுதல்  என்பர்.  “நெய்யை   முனை  முதிர்  தருப்பை
தன்னால்  மந்திரத்து அமைய  முக்கால்  மண்ணி” (சீவக.  2465) எனும்
தேவர்  அடிகளும் அவற்றிற்கு நச்சர்  உரையும்  காண்க.  இனி. அறம்
தளிர்ப்பதற்கு  ஆவனவெல்லாம்  புரிய  உள்ள  கைஎனும்  பொருளும்
தோன்ற. “தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்” என்றார்.        89