கடிமணப் படலம் - 1327
திருமணம் காணத் தேவர் வருகை
1327.
இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ்
சந்திர மௌலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன்;- அழகு காணவே.
அழகு காண- இராமன் சீதை இருவரின் மணக் கோல அழகு
காண; அந்தரம் இந்திரன் சசியொடும் எய்தினான் - வான்வெளியில்
தேவேந்திரன் தன் மனைவி சசிதேவியுடன் வந்து அடைந்தான்;
இளஞ் சந்திர மௌலியும் தையலாளொடும் வந்தனன் -
இளம்பிறையைச் சூடிய சிவபெருமானும் உமையாளொடும்
வந்தடைந்தான்; மலர் அயன் வாக்கினாளுடன் புகுந்தனன்-
தாமரையில் வாழ்கின்ற நான்முகனும் கலைமகளொடு வந்தடைந்தான்.
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் ஆதலின்
இருவரின் பேரழகுப் பெருக்கினைச் சுட்ட வானத்துத் தேவர்
தலைவர்கள் மணங்காண வந்தனர் என்னாது. “அழகு காண” வந்தனர்
என்றார். மணக்கோல அழகு நெஞ்சில் நிற்கும் அழகு ஆதலின்
“மணவணி காண மகிழ்ந்தனர்” (சிலம்பு. 1) என்பார்
இளங்கோவடிகளும். 82
