கடிமணப் படலம் - 1326
திருமணச் சிறப்பு
1326.
ஒலி கடல் உலகினில். உம்பர். நாகரில்.
பொலிவது மற்று இவள் பொற்பு; என்றால். இவள்
மலிதரு மணம் படு திருவை. வாயினால்.
மெலிதரும் உணர்வினேன். என் விளம்புகேன்?
ஒலிகடல் உலகினில் உம்பர் நாகரில் பொலிவது மற்று இவள்
பொற்பு என்றால்- ஒலிக்கும் கடல் சூழ்ந்த இம் மண்ணுலகிலும் தேவ
உலகிலும் நாக உலகிலும் உள்ள அனைவர் அழகினையும் ஒரு சேர
வைப்பினும் இச்சீதையழகே மேல் ஓங்கிப் பொலிந்து நிற்கும்
என்றால்; இவள் மலிதரு மணம் படு திருவை - இவளது மணம்
நிறைந்த திருமண வைபவத்தை; மெலிதரும் உணர்வினேன் என்
விளம்புகேன்? - சிறிய அறிவினையுடைய யான் என்னவென்று
சொல்லவல்லேன்?
பேரழகுப் பெட்டகத்தின் திருமண வைபவத்தைச் சிற்றறிவுடைய
யான் எப்படிச் செப்புவேன் என்று கவிஞர். இத்துணை வர்ணனை
புரிந்தும் மனம் நிறைவுறாத ஏக்கத்தை கவிக் கூற்றாய்
வெளிப்படுத்தியவாறு. மூவுலகிலும் உள்ள அழகுக் கூறுகள்
அனைத்தும் திருவின் கூறு என்பது கருத்து. மூவுலகத்தோர்
எல்லோரும் மணப் பெண்களின் அழகுக்கு உவமிக்கப்படும் அந்த
அழகின் மூலப் பெட்டகமே. மணப்பெண்ணாக அமர்ந்திருக்கையில்
(கம்ப. 503) இவள் மணம்படு பேரழகை “வாயினால் மெலிதரும்
உணர்வினேன் என் விளம்புகேன்” என உரைக்க இயலாமையை
உரைத்தவாறு. 81
