கடிமணப் படலம் - 1325
வானவர் வியத்தல்
மணவணி காண வானத்தே வானவர் வருதல்
கலி விருத்தம்
1325.
நன்றி வானவர் எலாம். இருந்த நம்பியை.
‘துன்று இருங் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும். இன்று உடைத்து அழகு’ என்றார் அரோ.
நன்றி வானவர் எலாம் - நன்றியுணர்வுடைய தேவர் எல்லோரும்;
இருந்த நம்பியை - அங்கு வீற்றிருந்த இராமபிரானை (நோக்கி);
துன்று இருங் கடல் துவைப்பத் தோன்றிய - (அலை) செறிந்த
பெருங்கடலாகிய பாற்கடலைக் கடைந்த காலத்துத் தோன்றிய; மன்றல்
அம் கோதையாள் மாலை சூட்டிய அன்றினும் - மணம்மிக்க அழகிய
கூந்தலையுடைய திருமகள் (திருமாலுக்கு) மாலை சூட்டிய அந்தத்
திருநாளைக் காட்டிலும்; இன்று அழகு உடைத்து என்றார் - இவளுக்கு
நீ மாலை சூட்டும் இந்நாள் (மிக) அழகியது என்று கூறி
மகிழ்ந்தார்கள்.
இன்று நிகழும் ‘திரு’மணம் “தீயோர் இறந்து உக நூறித் தக்கோர்
இடர் துடைத்தற்கு” (கம்ப. 5885) ஆதலின். “அன்றினும் இன்று
அழகுடைத்து” என்றனர் தேவர் என்க. தம் பொருட்டுப் பெருமான்
அவதரித்துள்ளான் ஆதலால் அந்நன்றியுணர்வோடு தேவர்கள்
நிறைந்திருந்தனர் என்பார். “நன்றி வானவர்” என்றார். பாற்கடல்
கடைந்த அன்று நஞ்சு எழுந்தது; அமுதத்தை அசுரர்க்குத் தராமல்
ஏய்த்த கசப்பு தேவாசுரப் போர் - முதலிய இடையீடுகள் பின்
நிகழ்ந்தன. அத்தகைய ஊறுகள் எதுவுமின்றி இத்திருமணம் இனிதே
நிகழ்வதால் இரண்டையும் கண்ணுற்ற தேவர்கள் “அன்றினும் இன்று
உடைத்து அழகு என்றார்” எனினுமாம். தேவ வடிவினர்
திருமணத்தினும் மானுடம் புக்க இவ்விருவர் திருமணம் அழகிற்று
என்பதாம். 80
