கடிமணப் படலம் - 1324
சீதை மணமண்டபம் சார்தல்
மணமண்டபத்துள் சீதை வந்த காட்சி
1324.
சிலையுடைக் கயல். வாள் திங்கள்.
ஏந்தி. ஓர் செம் பொன் கொம்பர்.
முலை இடை முகிழ்ப்ப. தேர்மேல்
முன்திசை முளைத்தது அன்னாள்.
அலை கடல் பிறந்து. பின்னை
அவனியில் தோன்றி மீள
மலையிடை உதிக்கின்றாள் போல்.
மண்டபம் அதனில் வந்தாள்.
ஓர் செம்பொன் கொம்பர்- சிவந்த பொன்னின் நிறமுடைய ஒரு
பூங்கொம்பு; சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி - வில்லை
மேற்புறத்தில் உடைய கயல்மீன்களை இடையிலே பெற்ற. ஒளியுடைய
(பூரண) சந்திரனை ஏந்தி; இடை மு(ல்)லை முகிழ்ப்ப -
அச்சந்திரனுக்கு இடையிலே முல்லையரும்பு சிறிதே மலர; தேர்மேல்
முன்திசை முளைத்தது அன்னாள் - தேரின் மேல் கிழக்குத் திக்கிலே
தோன்றியதனைப் போன்ற பிராட்டி; அலைகடல் பிறந்து பின்னை
அவனியில் தோன்றி - அலைகளையுடைய திருப்பாற்கடலிலே
(திருமகளாகப்) பிறந்து. பின்பு மண்ணுலகில் (சீதையாக) அவதரித்து;
மீள மலையிடை உதிக்கின்றாள் போல். மண்டபம் அதனில்
வந்தாள் - மீண்டும் ஒரு மலையினிடத்தே பிறக்கின்றாள போலே
அம்மண்டபத்தில் வந்தடைந்தாள்.
ஒரு பொன்னிறப் பூங் கொம்பு வில்லையும் கயலையும் உடைய ஒரு
சந்திரனை ஏந்தி. முல்லை மலர் அரும்ப வந்தால் சானகிக்கு
உவமையாம் என்பதனால் இஃது இல்பொருள் உவமையணி.
பொன்னிறப் பூங்கொம்பு சீதையின் வடிவுக்கும். வில் புருவத்திற்கும்.
கயல் கண்கட்கும். முல்லை முறுவற்கும். திங்கள் முகத்திற்கும்
உவமைகளாயின. மலை: மண்டபத்திற்கு உவமையாம்.
பிராட்டிக்கு. “வேறு ஒப்பு எங்கே கொண்டு எவ்வகை நாடி உரை
செய்வாம்” (கம்ப. 503). ‘யாழும் எழுதி’ என்ற திருக்கோவையார்
பாடல் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. 79
