கடிமணப் படலம் - 1322

bookmark

இராமபிரான் மணமண்டபம் சேர்தல்

மண்டபஞ் சார்ந்த இராமன் தந்தையையும் முனிவரையும்
தொழுது அமர்தல்
 
அறுசீர் ஆசிரிய விருத்தம்
 
1322.    

எஞ்சல் இல் உலகத்து உள்ள
   எறி படை அரச வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற.
   கொற்றவன் இருந்த கூடம்.
வெஞ் சினத் தனுவலானும்.
   மேரு மால் வரையில் சேரும்
செஞ் சுடர்க் கடவுள் என்ன.
   தேரிடைச் சென்று சேர்ந்தான்.
 
எஞ்சல்     இல் உலகத்து உள்ள-  யாரும்  எஞ்சாமல் உலகம்
முழுவதும்  உள்ள;   எறிபடை   அரச   வெள்ளம்   -  வீசுகின்ற
ஆயுதங்களை  ஏந்திய  அரசர்களின்  மிகுதியான  கூட்டம்;  குஞ்சரக்
குழாத்தின்  சுற்ற-  யானைகளின்  கூட்டம்  போல் சுற்றிலும்  நிற்க;
கொற்றவன் இருந்த கூடம்  -   தசரதச்   சக்கரவர்த்தி   வீற்றிருந்த
அந்தத்   திருமண மண்டபத்தை; வெம்சினத் தனுவலானும் - கொடுங்
கோபமுடைய  வில் தொழிலில் வல்லவனான இராமபிரானும்; மேருமால்
வரையில் சேரும் செஞ்சுடர்க் கடவுள்  என்ன  -  மேரு  என்னும்
பெரிய   மலையைப்   போய்ச்   சேருகிற  சிவந்த   கதிர்களையுடைய
சூரியனைப்  போல; தேரிடைச் சென்று சேர்ந்தான் - தேரின் மேலே
சென்று சேர்ந்தான்.

மேரு    மாமலை.  அந்த மண மண்டபத்திற்கும். அம்மலையடைந்த
சூரியன் இராமபிரானுக்கும் உவமைகள்  ஆயின.  அரசர்களை  யானைக்
கூட்டமென்றார்.  தசரதனைச்  சிங்க  ஏறு  என்றற்கு.   இராமன்.  வில்
ஒன்றைத்  தவிர.  வேறு  ஆயுதங்கள்  எவையும்  ஏந்தாத  வில்வலான்
ஆதலின்.  “வெஞ்சினத்  தனுவலான்”  என்று  ஒரு   பெயர்  ஈந்தார்.
திருக்கோவில்  படிவங்களிலும்  கையும்  வில்லுமாகவே  இராமபிரானின்
திருவுருவங்கள் காட்சி நல்குவதும் காணலாகும்.                   77