கடிமணப் படலம் - 1316

bookmark

1316.    

நூல் வரும் தகையன. நுனிக்கும் நோன்மைய.
சால் பெருஞ் செவ்விய. தருமம் ஆதிய
நாலையும் அனையன. புரவி நான்கு. ஒரு
பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே.*
 
நூல்   வருந் தகையன- அசுவ சாத்திரத்தில்  கூறப்படும்  உத்தம
இலக்கணங்களை  உடையவையும்; நுனிக்கும்  நோன்மைய -  கூர்ந்து
உணர்தற்கேற்ற  ஆற்றலையுடையவையும்;  சால்  பெரும் செவ்விய -
நிரம்பிய பேரழகுடையவையும்;தருமம் ஆதிய நாலையும் அனையன -
அறம்.    பொருள்.     இன்பம்.     வீடு     என்னும்   நால்வகைப்
புருடார்த்தங்களைப் போன்று யாவராலும் அடைய விரும்பப்படுபவையும்
ஆகிய;   புரவி   நான்கு   ஒரு  பாலமை உணர்ந்தவன்  பக்கம்
பூண்டவே  -  நான்கு குதிரைகள் உயிர்களின் ஒப்பற்ற    உள்ளத்தின்
தன்மையை     உணரவல்லவனாகிய    இராம பிரானுடைய    தேரில்
பூட்டப்பெற்றுள்ளன.

பாலமை:   பான்மை: தன்மை. அறம். பொருள். இன்பம்.  வீடு எனும்
புருடார்த்தங்கள்  நான்கின்  பயிற்சியும்  உயர்நிலை  எய்தும்  ஆன்மக்
கூட்டத்திற்கு   இலக்கையடைய    உதவுவதுபோல.   உரிய   இலக்கை
எளிதில்  அடைய  பயிற்சிமிக்க   இக்குதிரைகள்   நான்கும்   உதவும்
என்பதாம்.                                                 71