கடிமணப் படலம் - 1315
இராமபிரான் ஏறிய தேரின் சிறப்பு (1315-1316)
இராமபிரான் தேர்க் காட்சி
1315.
பொன் திரள் அச்சது; வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது; வயிரத்தின் உற்ற தட்டது;
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது;
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒப்பதே.
பொன் திரள் அச்சது - பொன்னால் ஆன திரண்ட
அச்சினையுடையதும்; வெள்ளிச் சில்லி புக்கு உற்றது -
வெள்ளியினால் ஆன சக்கரங்கள் நுழையப் பொருந்தியதும்;
வயிரத்தின் உற்ற தட்டது - வச்சிர மணியால் ஆன
தட்டினையுடையதும்; சுற்று உறு நவமணி சுடரும் தோற்றத்தது -
சுற்றிலும் பொருந்திய நவமணிகளால் நெடுந் தொலைவின்
அளவும் ஒளிவீசும் காட்சியையுடையதும் ஆகிய அந்த இராமபிரான்
ஏறிய தேர்; ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒத்ததே - ஒற்றைச்
சக்கரத்தையுடைய சூரியனது தேரொடு ஒத்து விளங்கியது.
சூரியனது ஒற்றைச் சக்கரத் தேர். ஒளியாலும் வேகத்தாலும்
உவமையாயிற்று. சூரிய மண்டல மத்தியில் சூரிய நாராயணன்
எழுந்தருளியிருப்பதாலும் உவமையாம் எனினுமாம். 70
