கடிமணப் படலம் - 1305
முப்புரி நூலின் தோற்றம்
1305.
மேவ அருஞ் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல்.
‘ஏவரும் தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு’ என்.
தேவரும். முனிவரும். தெரிக்கலா முதல்
மூவரும். தான் என. முடித்தது ஒத்ததே.
மேவு அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின்நூல்-(மிகு ஒளியில்
அருகில்) நெருங்குவதற்கரிய சூரியன். சந்திரன். தீ எனும் முச்சுடர்கள்
போலே. மார்பில் விளங்குகின்ற முப்புரி நூலானது; தேவரும்
முனிவரும் தெரிக்கலா முதல் மூவரும் தான் என - தேவர்களும்
முனிவர்களும் இன்னதென்று அறிவித்து விட இயலாத
மும்மூர்த்திகளின் வடிவமும் தானே (இராமனே) என்று; ஈண்டு
ஏவரும் தெரிந்து இனிது உணர்மின் என - இங்கே எல்லோரும்
ஆராய்ந்து. இனிதாய் அறிந்துணருங்கள் (முடிவுக்கு வாருங்கள்)
என்று; முடித்தது ஒத்ததே - (அதற்கு அடையாளச் சின்னமாக)
(முடியிட்டதைப் போன்று) முடியப்பட்டிருந்தது.
மூன்று மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவமே இராமன் என
ஆனான் என்னும் தமது கடவுட் கொள்கையைக் கம்பர் இங்குத்
தெளிய உணர்த்தும் திறம் காண்க. “மூன்று கவடாய் முனைத்தெழுந்த
மூலமே” (கம்ப. 3682) “செங்கண்மால் நான்முகன் சிவன் என்றே
கொலோ எங்கள் நாயகனையும் நினைத்தி ஏழை நீ” (கம்ப. 5194)
“முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர் இம் மானிடர்”
(கம்ப. 3416) எனவும் மேலும் பல இடங்களில் உணர்த்திப் போவதை
ஆங்காங்குக் கண்டு தெளியலாம். 60
