கடிமணப் படலம் - 1304
உத்தரீயக் காட்சி
மேலாடை (உத்தரீயம்) அணிதல்
1304.
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என. ஒளி திகழ் உத்தரீயம்தான்.
தணிவு அருங் கருணையான் கழுத்தில் சாத்திய.
மணி உமிழ் கதிர் என. மார்பில் தோன்றவே;
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் உணர்வு என- (எளிய
மக்களால்) அணுகுவதற்கும் அரிய ஞான நடையினைப்
பூண்டொழுகும் ஞானிகள் தூய அறிவு போல; ஒளி திகழ் உத்தரீயம்
தான் - ஒளிவிடுகின்ற மேலாடையானது; தணிவு அருங் கருணையான
கழுத்தில் சாத்திய மணி உமிழ் கதிர் என - குறையாது மேன்மேற்
பெருகுங்கருணையே வடிவினனான இராமபிரானின் கழுத்திலே
சாத்தப்பட்ட மணிகள் சிந்திய ஒளியினைப் போல; மார்பில்
தோன்றவே - திருமார்பில் தோன்றுமாறு (இராமன் அணிந்தான்.)
ஞானம்: மெய்யுணர்வு. அஃதாவது பிறப்பு. வீடுகளையும் அவற்றின்
காரணங்களையும். விபரீத. ஐய அறிவுகளால் அல்லாமல் உண்மையாக
அறிதல். இதனையே ‘தத்துவ ஞானம்’ என்பர். (திருக். 36 அதி. முன்
பரிமே) மேல். “ஒழிவரு கருணையான்” என அவனிடம் உள்ள
கருணையின் நீங்காத் தன்மை கூறினார். இங்கு. “தணிவருங் கருணை”
என கொடுக்கக் கொடுக்கக் குறையாத அதன் பூரணத் தன்மை
கூறினார். ஞானியர் உணர்வு மாசற்றதாகலின் மாசற்ற உத்தரீயத்திற்கு
உவமையாயிற்று. கழுத்தணியின் ஒளி வெள்ளம் மார்பில் பாய்ந்தது
போன்றும் இது இலங்கிற்று என்பதாம். 59
