கடிமணப் படலம் - 1298

bookmark

வீரபட்டம் சூடல்

வீரபட்டமும் திலகமும் அணிதல்
 
1298.    

கார் விடக் கறையுடை. கணிச்சி. வானவன்
வார் சடைப் புடையின். ஓர் மதி மிலைச்ச. தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என.
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே;
 
கார்விடக்  கறை உடைக் கணிச்சிவானவன்-  கரிய  நஞ்சாலான
கருநிறத்தைக்   கழுத்திலே   உடைய    மழுவேந்திய   சிவபெருமான்;
வார்சடைப் புடையின்  ஓர்  மதி  மிலைச்ச - நீண்ட தன் சடையின்
மேலிடத்தில். பிறை  மதியைச்  சூடியருள;  தான்  சூர்சுடர்க்  குலம்
எலாம்  சூடினான் என - அது கண்டு தெய்வத்தன்மையுள்ள  சூரியன்.
தீ   முதலிய  சுடர்க்  கூட்டங்களையெல்லாம்  ஒருங்கே  தான்   தன்
தலைமேலே  சூடுவான் போல; வீரபட்டத்தொடு திலகம் மின்னவே -
நெற்றியின்  மேலே   அணியும்  வீர  பட்டிகையென்னும்  அணியையும்
திலகம் என்னும் அணியையும் (இராமன் அணிந்தான்.)

வீரபட்டம்:     வீரர்  நெற்றியில்  அணியும்  பொன் முத்துக்களால்
ஆயதோர்   அணி.  பட்டம்  எனவும்.  வீரபட்டிகை   எனவும்   இது
வழங்கும்.  “நுதல்  அணி  ஓடையில் பிறழும் வீர பட்டத்தில்”   (கம்ப.
3033)  என்பார்  மேலும்.  திலதம்  -   சுட்டி.  இது   வீரபட்டத்திற்கு
அருகில்   இணைந்திருப்பது.   “சுட்டி    சேர்வாளார்    நுதற்பட்டம்”
(ஆதியுலா. 17) எனவும். “நித்திலம் செய் பட்டமும்  நெற்றித்  திலதமும்
ஒத்திலங்க”  (பெருந்தொகை.  426) எனவும் வருதல்  காண்க.  சூரியன்.
தீ.    சந்திரராகிய    முச்சுடர்களுள்     ஒன்றையே    சிவபெருமான்
சூடினானாக.   இராமன்   மற்றையிரண்டு    சுடர்களையும்   சேர்த்துச்
சூடினமை போல வீர பட்டமும் திலதமும் ஒளி சிந்தின என்பதாம்.   53