கடிமணப் படலம் - 1295
கலவைச் சாந்தணிதல்
இராமன் கலவைச் சாந்து அணிதல்
1295.
அழி வரு தவத்தினொடு. அறத்தை ஆக்குவான்.
ஒழிவு அருங் கருணை ஓர் உருவு கொண்டென.
எழுத அரு வடிவு கொண்டு. இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு என. கலவை. சாத்தியே;
அழிவரு தவத்தினொடு அறத்தை ஆக்குவான்- காப்பவரின்றி
அரக்கர்களால் அழிவெய்தி வந்த தவத்தையும் தருமத்தையும்
மீண்டும் வளர்த்திடும் பொருட்டு; ஒழிவு அருங்கருணை ஓர் உருவு
கொண்டென - (இறைவனிடத்திருந்து என்றும்) நீங்காத அருளானது
ஒரு வடிவு கொண்டு வந்தாற் போல; எழுத அரும் வடிவு கொண்டு -
ஓவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தைப் பெற்று; இருண்ட
மேகத்தைத் தழுவிய நிலவு என - இருள் நிறம் பெற்றதான ஒரு
கருமேகத்தைத் தழுவிடுகின்ற வெண்ணிலாவைப் போல;கலவை சாத்தி
- கலவைச் சந்தனத்தை யெடுத்து (இராமன் அணிந்தான்.)
“தர்மம் குன்றி அதர்மம் மிகும் போது நான் யுகந்தோறும்
தோன்றுவேன்” (கீதை. 4:8) எனும் கீதைக் கருத்து முதலடியில்
கூறப்பட்டது. “இறைவனுக்குக் கருணையே இயல்பு . “கோபம் வந்தேறி”
(திருவாய். ஈடு 9:2:10) என்பது “ஒழிவரு கருணை” என்பதனால்
பெறப்பட்டது. இறைவனின் திருமேனியழகு. “எழுதரு வடிவு”
என்பதனாற் கூறப்பட்டது. இராமபிரான் பிறப்பு அறங்காக்கவே
என்பது. “அறந்திறம்பும் என்று ஐயன் அயோத்தியில் பிறந்த பின்பு”
(கம்ப. 1824) முதலாகக் காவியம் நெடுகிலும் கவிஞர் மீண்டும் மீண்டும்
உரைப்பார். கருணையின் அடர்த்தியினால் செறிந்து பொழியக்
காத்திருக்கும் மேகம் என்பார். “கருணை ஓர் வடிவு கொண்டு
இருண்ட மேகத்தை” என்றார். “ஆறாக் கனல் ஆற்றுமோர் அஞ்சன
மேகம்” (கம்ப. 1726) என்பார் பின்னும். மேகத்தைத் தழுவிய நிலவு
போல. நீலத் திருமேனியில் சாத்திய சந்தனக் குழம்பு நிலவியது
என்பதாம். ஆதியஞ் சோதி மூர்த்தியை வழிபட்டபின். அத்தெய்வ
மேனியில் பூசப்பட்டிருந்த உயர் சாந்து இராமபிரான் இப்போது பூசிய
கலவை என்க. “மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து “ (திருப்பல்.9)
என்னும் பெரியார் மொழியாலும் இம்மரபு தெரியலாகும். இதனைக்
“கோயிற் சாந்து” என்பர். இதுமுதல் பதினெட்டுப் பாடல்கள் இராமன்.
மணக்கோலம் புனைந்த மாட்சி கூறுவன. 50
