கடிமணப் படலம் - 1294

bookmark

ஆதியஞ்சோதியை அடிவணங்கல்

1294.    

கோது அறு தவத்துத்தம் குலத்துளோர் தொழும்
ஆதிஅம் சோதியை அடி வணங்கினான் -
காது இயல். கயல்விழிக் கன்னிமார்களை.
வேதியர்க்கு அருமறை விதியின் நல்கியே.
 
காது  இயல் கயல் விழிக் கன்னிமார்களை- காதளவோடிய கயல்
போன்ற   கண்ணியர்களாகிய   கன்னிப்   பெண்டிரை;   வேதியர்க்கு
அருமறை  விதியின்  நல்கி  - வேதம் வல்லார்க்கு அரிய வேதத்தில்
விதித்த   வண்ணம்   ஈந்து;   கோது  அறு  தவத்து  -  குற்றமற்ற
தவமுடைமையினாலே; தம் குலத்துளோர் தொழும் - தமது  குலத்தே
உதித்த   அரசர்கள்   எல்லோரும்  வணங்கி  வருகிற   (தனது   குல
தெய்வமான);  ஆதி அம் சோதியை அடி வணங்கினான் - ஆதியாய்
நிற்கும்  அழகிய  ஒளி  வடிவமான   திருவரங்க   நாதனைத்  திருவடி
தொழு வணங்கினான்.

நான்முகனது     ஆராதன    மூர்த்தியாக   இருந்த   பாற்கடலில்
பள்ளிகொண்ட திருவுருவாகிய திருவரங்கநாதனை  இட்சுவாகு  வேந்தன்
வரத்தால்  பெற்று. திருவயோத்தியில்  வைத்துத்  தன்குலத்  துதித்தோர்
எல்லோரும்     வணங்கும்    தெய்வமாக்கினான்.   ஆதலின்.   “தம்
குலத்துளோர் தொழும் ஆதியஞ் சோதியை” என்றார்.  இதனை.  “பிணி
அரங்க. வினை அகலப் பெருங்காலம் தவம் பேணி.  மணியரங்கு  நெடு
முடியாய்!  மலர்  அயனே  வழிபட்டு.  பணி அரங்கப்  பெரும்  பாயல்
பரஞ்சுடரை  யாம் காண. மணி அரங்கம் தந்தான்”  (கம்ப. 637)  எனக்
குலமுறை  கிளத்தும்போதும்  கூறியுள்ளமை காண்க. “ஆதியஞ்   சோதி
உருவை  அங்குவைத்து  இங்குப் பிறந்த வேத முதல்வன்”   (திருவாய்.
3.5.3)   என்பர்   நம்மாழ்வார்.  “உலகனைத்தும்   விளங்கும்   சோதி.
வெங்கதிரோன்  குலத்துக்கோர்  விளக்காய்த்   தோன்றி  விண்முழுதும்
உயக்கொண்ட  வீரன்  (பெருமாள்  திரு.  10.1)   என்பார்.  குலசேகரப்
பெருமானும்.    அரசர்களும்     சமய    குரவர்களும்.    வேற்றிடஞ்
செல்லுங்கால்.  தாம் வழிபடும் தெய்வ  வடிவங்களை.  உடன்  கொண்டு
செல்லுதல்  மரபாதலால். அயோத்தி வேந்தர்கள்  வழிபடும்  இட்சுவாகு
குலதனமாகிய    மூர்த்தமே    மிதிலைக்குக்    கொண்டு   வரப்பட்டு.
வழிபடப்பட்டது   எனலாம்.    அரசர்கள்    கன்னிகாதானமாக   ஒரு
மணமகளை அடையுமுன்  மணமாகா  அந்தணர்க்குக்  கன்னிகைகளைத்
தானமாக  ஈதல்  மரபு   ஆதல்.  “காது இயல் விழிக்  கன்னிமார்களை
வேதியர்க்கு அருமறை விதியின் நல்கி” என்பதனால் தெரிகிறது.     49

இதுமுதல்   பதினெட்டுப்    பாடல்கள்   இராமன்.   மணக்கோலம்
புனைந்த மாட்சி கூறுவன: