கடிமணப் படலம் - 1292

bookmark

இராமபிரான் திருமஞ்சனம் ஆடல்

 மங்கல நீராடி இராமன் மணக்கோலம் பூணல்
 
1292.    

சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும்.
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்.
கங்கையே முதலிய கலந்த நீரினால்.
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே.
 
சங்கு  இனம்  தவழ்  கடல்  தந்தவும்  -  சங்குக்  கூட்டங்கள்
தவழ்கின்ற      ஏழ்கடல்களிலிருந்தும்      கொண்டு      வரப்பெற்ற
தீர்த்தங்களையும்; சிங்கல்  இல்  அருமறை  தெரிந்த  தீர்த்தமும் -
அழிவற்ற   அரிய    வேதங்களால்  ஆராய்ந்து   கூறப்பட்ட  (புனித)
தீர்த்தங்களையும்; கங்கையே  முதலிய கலந்த நீரினால் - கங்கை நதி
முதலிய   (புனித)   நதிகளின் தீர்த்தங்களையும்  கலந்து ஆக்கிய புனித
நீரால்;  மங்கல  மங்சனம்  மரபின்  ஆடி  -  மரபின்  முறைப்படி
இராமபிரான் மங்கல நீராடிய பின்.                             48