கடிமணப் படலம் - 1254

bookmark

தேவியின் வருத்த மிகுதி

1254.    

‘பண்ணோ ஒழியா; பகலோ புகுதாது;
எண்ணோ தவிரா; இரவோ விடியாது;
உள் நோவு ஒழியா; உயிரோ அகலா;
கண்ணோ துயிலா; இதுவோ கடனே?
 
பண்ணோ  ஒழியா-  (நகரின்)  இசைகளோ அடங்குவதாக இல்லை;
பகலோ புகுதாது - பகற்பொழுதோ வந்தடைவதாக இல்லை; எண்ணோ
தவிரா  - (இராமனைப் பற்றிய) எண்ணங்களோ  நீங்குவதாக  இல்லை;
இரவோ விடியாது  - (இந்தக் கொடிய) இரவுப் பொழுதோ  விடிவதாக
இல்லை;  உள்   நோவு  ஒழியா -  (என்) உள்ளத்துத் துன்பங்களோ
ஒழிவதாக   இல்லை;  உயிரோ   அகலா  -      என்     உயிரும்
உடம்பை   விட்டு  அகலுவதாகவும் இல்லை; கண்ணோ துயிலா - என்
கண்களும்  உறங்குவதாகவும்  இல்லை; இதுவோ கடனே? - இங்ஙனம்
வருந்தித் தவிப்பதோ பெண்ணாய்ப் பிறந்த எனது கடமையானது?

“உயிரோ  அகலாது” எனற்பாலது - “உயிரோ அகலா” என வந்தது
செய்யுள்  ஆதலின்  வந்த  ஒருமை  பன்மை  மயக்கம்.    துயரங்கள்
அடுக்கடுக்காக  வருவதைப் போல் வாக்கியங்களையும்   அடுக்கடுக்காக
அடுக்கிக்   காட்டுகிறார்.  “பஞ்சப்பிராணன்”  என்பதனால்  “உயிரோ
ஒழியா” எனப் பன்மையால் கூறினார் எனவுமாம்.                 10