கடிமணப் படலம் - 1253
இரவு நீட்டித்தது குறித்து இரங்கல்
இரவைப் பழித்தல்
1253.
‘தெருளா வினை தீயர் சேர் நரகோ?
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ?
கருள் ஆர் கடலோ? கரை காண்பு அரிதால்!-
இருளானதுதான் - எனை ஊழிகொலாம்?
இருளானது தான் - (இங்குச் சூழ்ந்துள்ள) இருள் என்று
சொல்லப்படுவதுதான்; தெருளா வினை தீயவர் சேர் நரகோ -
தெளிவற்ற பாவச் செயல்களைச் செய்வார் சென்றடையும் நரகமே
தானோ? (இந்த இருளில்); அவா அதுவோ அருளான் நெறி ஓடும்-
என்னுடைய காதல் வேட்கையோ. என்னிடம் இன்னும் அருள்
காட்டாதவனாகிய இராமன் இருக்கும் இடமே நோக்கி ஓடுகின்றது!;
கருள் சேர் கடலோ? - (விடிந்தால் அவனை அடையலாம் எனில்)
(இந்த இரவோ) கருமை நிறைந்து (எல்லையற்ற தாதலின் கடல் என
முன்நிற்கிறது); கரை காண்பு அரிதால் - (இவ்விரவு எனும் கடல்
மெல்லியலாள் ஆகிய நான்) நீந்திக் கடந்து கரை காண்பதற்கும்
அரிதாகிறது; எனை ஊழி கொல் ஆம்? - எத்தனை ஊழிக்காலம்
சேர்ந்து (இந்த ஓர் இரவு) ஆகியுள்ளது?
பிரிவில் தவிப்பார்க்கு ஒரு நொடியும் ஒரு யுகமாகத் தோன்றும்
ஆதலால் “எனை ஊழி கொலாம்” என்று பிராட்டி தவித்தனள் என்க.
எனை - எத்தனை. “ஒருநாள் எழுநாள் போல் செல்லும் சேண்
சென்றார் வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு” (திருக். 1296) எனும்
கூற்றையும் ஒப்பிடுக. கடல் நீந்தற்கு அரியது என்பாள் “இருள் கருள்
சேர் கடல்; கரை காண்பு அரிது” என்றாள். “காமக் கடும் புனல்
நீந்திக் கரை காணேன்; யாமத்தும் யானேயுளேன்” (திருக் 1167);
“இன்பம் கடல் மன்னும் காமம்; அஃது அடுங்கால். துன்பம் அதனில்
பெரிது” (திருக். 1166). 9
